விபத்தில் சிக்கிய பத்திரிக்கையாளருக்கு, தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற மாநில தலைவர் நாகராஜன் நிவாரணம் வழங்கினார்

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் உறுப்பினரும், நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவரும் செய்தியாளருமான சதீஷ் என்பவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பணி நிமித்தமாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சிறியரக சரக்கு வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். முழுமையாக குணமடையாத நிலையில் அவரால் பணிக்கு திரும்ப முடியவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர் சதீஷ் மிகவும் பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற மாநில தலைவர் நாகராஜன்னுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் தேசிய தலைவர் ராஜேந்திரன் ஆலோசனைப்படி, மாநில தலைவர் நாகராஜன், மாநில செயலாளர் துரைராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சதீஷ்-ன் வீட்டிற்கு நேரில் சென்றனர். சதீஷிடம் நலம் விசாரித்த அவர்கள், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக 5000 ரூபாயை வழங்கினர். மேலும், அவரது குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அவரது பெற்றோரிடம் வழங்கினர். இதில், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் துணை தலைவர் தண்டபாணி, தென்சென்னை மாவட்ட தலைவர் பாண்டியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் அடையாறு சங்கர், தென்சென்னை மாவட்ட பொருளாளர் அடையாறு கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.