திமுக வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கோரிக்கை

 

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய வடசென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில்

வடசென்னை பாராளுமன்ற தொகுதி நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் இருந்து சுமார் பத்து நாட்களுக்கு என திட்டமிட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 10 பேர் காணாமல் போய்விட்டனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் பல நாட்களாகத் தொடர்ந்து தேடிவந்த நிலையில், சுமார் 2 மாதங்கள் கழித்து அவர்கள் மியான்மர் நாட்டின் கடற்கரை ஓரம் ஒதுங்கியுள்ளது கண்டுபிடிக்கபட்டது. பத்து நாட்கள் பயணமாக திட்டமிடப்பட்ட மீன்பிடிப் பயணம், பசி பட்டினியுடன் கடல் அலைகளால் அலைகழிக்கபட்டு இரண்டு மாத கால அளவிற்கு, பல்வேறு துன்பங்களை அனுபவித்து, மியான்மர் நாட்டின் கடற்கரை ஓரம் கண்டுபிடிக்கபட்டுள்ளனர்.

தலைவர் அவர்களே இதற்காக நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவத்துக்கொள்கிறேன். இம்மீனவர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளானாலும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களை போல இதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 7 மீனவர்கள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. அவர்கள் பயணம் செய்த படகு மட்டும் எங்கோ ஒரு தொலை தூரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

நமது நாடு சுமார் 7000 கிலோ மீட்டருக்கு நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ளது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 40 லட்சம் மீனவர்களால் மிகப்பெரிய அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு, நமது நாடு கடல் மீன்கள் வணிகத்தில் உலகில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது. அயராது உழைக்கும் இம்மீனவர்களின் செயலால் நம்நாடு இந்த நிலையை எட்டியுள்ளது.

எனவே இம்மீனவர்களின் உயிரைக் காப்பது அரசாங்கத்தின் கடமை என்று நான் கருதுகின்றேன். இந்த பிரச்சனை என்னுடைய தொகுதிக்கு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, தமிழகத்தில் கடலோரம் அமைந்துள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவானது. ஏன் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநில மீனவர்களும் இத்தகைய இன்னலுக்கு ஆட்படுகின்றனர். இந்த மீனவர்களின் கோரிக்கை என்னவென்றால், அவர்கள் ஒவ்வொரு மீன்பிடிபடகுக்கும் மீனவர்களுக்கும் ஜி.பி.எஸ் கருவிகள் வழங்கக் கோருகிறார்கள். அப்படி வழங்கப்பட்டால் இம்மீனவர்கள் கடலின் கொந்தளிப்பில் காணாமல் போனால் கூட எளிதில் அவர்களைக் கண்டுபிடித்து மீட்க முடியும். மீன்வள அமைச்சகம், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வழங்கிட வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் பேசினார்.