சென்னை காசிமேட்டில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

நிவர் புயல் வலுவிழந்து கரையை கடந்த நிலையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி பகுதி சேதம், அடைந்துள்ளது. கடலில் முழுகிய படகுகள் முழுமையான சேதமடைந்த படகுகளாக உள்ளது.

சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்ட பின் கருத்து கணிப்பு பணிகள் முடிவுகளை அரசு பெற்ற பின்தான் எவ்வளவு படகுகள் சேதமடைந்துள்ளன என்பது தெரியும். அதன் பிறகே நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மீன்பிடி களங்களை ஒன்றிணைத்து காப்பீடு செய்தால் படகு உரிமையாளர்களுக்கு காப்பீடு தொகைக்கான தொகை குறையும்.

அரசின் நல்ல செயல்பாடுகளை மக்களிடம் மறைக்கும் வண்ணமாக எதிர்கட்சியினர் அறிக்கைகளை விடுத்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில் எதிர் கட்சிகள் ஆளுங்கட்சியை பாராட்டுவார்கள். ஆனால் இங்கு ஸ்டாலின் எங்களின் நல்ல நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல் அறிக்கை விட்டு வருகிறார்.

தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லாமல் அறிக்கை வெளியிடுவதையே குறிக்கோளாக திமுக செய்து வருகிறது.

தவளை போன்ற குறுகிய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின். அவருக்கு பரந்த மனப்பான்மை கொண்ட எண்ணம் என்பது இல்லவே இல்லை.

திமுகவினருக்கு மீனவர்களை எப்பொழுதும் பிடிக்காது. மீனவர்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மீனவர்களுக்கு எந்த நல திட்டத்தையும் திமுக செயல்படுத்தாது.

மீன்பிடி தொழில் என்பது வேட்டையாடுவது போன்றது. எல்லை பாராமல் வேட்டையாடும் தொழிலை மீனவர்கள் செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார். உடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேலன் உட்பட பலர் இருந்தனர்.