கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாநகராட்சியும் பல்வேறு தடுப்பு முறைகளை செயல்படுத்துகிறது. இதில் தீயணைப்பு துறை மூலமாக அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இரவு நேரங்களில் தீயணைப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கியது. கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கூறியதாவது,

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை தொடர்ந்து தினமும் இரவு 11 மணிக்கு மேல் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும் எனவும், முதற்கட்டமாக கொடுங்கையூர் மணலி நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது எனவும்,
சென்னையில் உள்ள 4 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 3 வாகனங்கள் வீதம் 12 வாகனங்களில் தினமும் சுழற்சி முறையில் சென்னை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.