சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் தனக்கு கீழே பணியாற்றி வரும் பெண் துப்புரவு ஊழியர்களை ஆபாசமாக பேசியதை கண்டித்தும், உதவி செயற்பொறியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி திருவொற்றியூரை சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியம் கூறுகையில், திருவொற்றியூர் 1 வது மண்டலத்தில் பணியாற்றும் பெண்களை உதவி செயற்பொறியாளர் ஆபாசமாக பேசி வருகிறார். மேலும் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் குறித்து செல்போனில் உதவி செயற்பொறியாளர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது. எனவே உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியாகவும், காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஆணையாளர் வரை நாங்கள் புகார் அளிப்போம் என அவர் தெரிவித்தார். மாதர் சங்கத்தினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்தில் காவல்துறை உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் தலைமையில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

செய்தியாளர்: முகேஷ்