தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் என அரசு துறைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கை அமல்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர்.

வடசென்னை பகுதியில் கடந்த 29 ஆம் தேதி வரை கொரோனா தொற்று என்பது இல்லவே இல்லை என்ற சூழ்நிலையே இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த சூழ்நிலை தலைகீழாக மாறி படிபடியாக கொரோனா தொற்று பரவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

30 ம் தேதி முதல் வடசென்னை பகுதியில் தனது கணக்கை தொடங்கிய கொரோனா கணக்கு 3 ஆம் தேதி வரை 9 பேருக்கு பரவியுள்ளது. இதில் ராயபுரத்தில் ஒருவருக்கும், ஆர்கே நகரில் 4 பேருக்கும், பெரம்பூரில் ஒருவருக்கும், திருவொற்றியூரில் 2 பேருக்கும், திருவிக நகரில் ஒருவருக்கும் என தனது பட்டியலை துவக்கியுள்ளது.

நோய் தொற்று இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டதால் அவர்கள் இருந்த தெரு முழுவதையும் முடக்கி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே வராத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் ஆர்கே நகரில் அமைந்து நேதாஜி நகர் 3 வது மற்றும் 5 வது தெரு, கொருக்குப்பேட்டை பாரதி நகர் 4 வது தெரு, மீனாம்பாள் நகர் மெயின் தெரு, ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெரு, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 4 வது தெரு, திருவிக நகரில் உள்ள கென்னடி ஸ்கொயர், பாஸ்யம் தெரு ஆகிய பகுதிகள் பொதுபோக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் முடக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரான் இயந்திரம் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

வடசென்னை பகுதியில் இருப்பவர்கள் உப்பு காற்றை சுவாசிப்பவர்கள் என்றும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்று வீன் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் தற்போது 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வடசென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.