சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2000 ஆண்டுகள் பழமையானது. விழாக் காலங்களில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த ஆண்டு, மாசி பிரம்மோற்சவம், மார்ச் 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா துவங்கியது முதல், உற்சவரான சந்தரசேகரர், சந்திர மற்றும் சூரிய பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அஸ்தமானகிரி, அதிகார நந்தி, யானை, புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை, 8:40 மணிக்கு, தீபாராதனையுடன் துவங்கியது. மேளவாத்தியங்களுடன், 108 சங்குகள் முழங்க, அபிஷேக அலங்காரத்தில், சந்தர சேகரர் திருத்தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள், ’தியாக ராஜா… நமச்சிவாயா’ என, விண்ணதிர முழங்கிய படி, வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி சுற்றி, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வந்து, சன்னதி தெருவில் நிலையை அடைந்தது.

18 திருநடனம்: மாலையில், சந்தரசேகரர் திருத்தேரில் இருந்து, கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, குதிரை வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும், சந்தரசேகரர் மாடவீதிகளில் உற்சவம் காண்பார். பிரம்மோற்சவத்தின், முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் – வடிவுடையம்மன் திருக்கல்யாணம், 28ம் தேதி காலையிலும், இரவில் மகிழடி சேவையும் நடைபெற உள்ளது. மார்ச், 1ல், கடலாடு தீர்த்தவாரி உற்சவம், இரவில், கொடியிறக்கம்; 2ம் தேதி இரவு, தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுறும்.