சென்னை ஆர்கே நகர் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் கொடிராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரவீன், தலைமை காவலர்கள் வெங்கடேசன், சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3 தெருவில் சிலர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக 3 நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நரசிமலு, சசிகுமார், முனியாண்டி என தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆந்திராவில் இருந்து மீஞ்சூர் வழியாக கஞ்சா கடத்தி வந்து ஆர்கே நகர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த ஆர் கே நகர் நகர் காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக பிடிபட்ட 3 பேரிடமும் தனிப்படை காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.