சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கலைஞர்கள் கொரோனா பாதிப்பால் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். கடந்த 6 மாத காலமாக கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக ஆட்கள் இல்லாமல் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பியிருந்த வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை தற்போது மிகவும் நலிவடைந்துள்ளது. மேலும் சில புகைப்பட கலைஞர்களும் கொரோனா நோய்க்கு பலியாகி உள்ளனர். மேலும் தொழில் தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதார பிரச்சனையை அரசுக்கு தெரிவிக்கும் வகையிலும், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதரத்திற்கு வழிவகை செய்யும் வகையிலும் அரசு கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் டுவிட்டரில் தங்களது கோரிக்கைகளை பிரச்சாரமாக மேற்கொண்டனர்.