சென்னை காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம் மற்றும் திருச்சினாங் குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் லட்சுமணன் சிவகுமார், பாபு, பார்த்திபன், திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த முருகன், கர்ணன், தேசப்பன், ரகு. லட்சுமிபுரம் குப்பத்தை சேர்ந்த தேசப்பன் உள்பட 10 மீனவர்கள் 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை எடுத்து கொண்டு கடலுக்குள் 70 நாட்டிகல் தூரத்திற்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் 48 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை. இதுகுறித்து மாயமான மீனவ குடும்பத்தினர் சென்னை காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மீன்வளத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டமாக காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் மாயமாகி இதுவரை 48 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் கடலில் மாயமான மீனவர்களை மீட்டு தரக்கோரி தமிழ்மக்கள் உரிமை கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியில் இருந்து சூரிய நாராயணா சாலை வழியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக வந்து மீன்வளத்துறை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.