இராணிப்பேட்டை ஆட்சித்தலைவர் திவ்யதரிஷினிக்கு பாமரர் ஒருவர் கடித பாணியில் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அதில் சூரை என்கிற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை என்றும். மேலும் ஸ்கூலுக்குள் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு அவற்றையெல்லாம் சீர்படுத்தி கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்

மரியாதைக்குரிய கலெக்டர் அம்மா வணக்கமா. நான் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள சூரை கிராமத்தைச் சேர்ந்தவன். எனக்கு அவ்வளவகா குறை சொல்லத் தெரியாது? இருந்தாலும் எங்கள் ஊர் ஸ்கூலில் நடக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு பற்றியெல்லாம் கொஞ்சம் அம்மாகிட்ட எடுத்துச் சொல்லி அதையெல்லாம் சீர் படுத்தனம்னு நெனைச்சேன். அந்த நோக்கத்துல தான் இதை சொல்கிறேன்.

எங்க ஊர்ல அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை கட்டுனாங்கம்மா. சுமார் 2.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் ஒரு கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அதை, போன 2018-ம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளி மூலமாக திறந்துவைத்தார்.

இந்தப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் தொடர்ந்து மாவட்ட அளவில் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றனர்.

இங்கு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவரான தாங்கள், குடியரசு தின விழா அன்று, மாணவ மாணவிகளை பாராட்டி விருதுகள் வழங்கினீங்கம்மா. ரொம்ப நன்றிங்க.

இந்த இடத்தில் சில முக்கிய விஷயங்களை பாமரனாகிய நான் தங்களுக்கு சுட்டிக்காட்டுறேங்க. ஏன்னா ஸ்கூல் சம்மந்தப்பட்டவங்க உங்களுக்கு அதையெல்லாம் சொல்லாம மூடி மறைச்சிடுவாங்கம்மா.

தற்போது இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவரே கிடையாதுங்க. பள்ளி கட்டிடம் அருகே உள்ள இடங்கள் வெட்ட வெளியாக உள்ளதால் இரவு நேரங்களில் பள்ளிக்கூடம் சாராயக் கூடமாக மாறி வருகிறது. பகல் நேரங்களில், சிலர் சமூகவிரோத செயல்கள் செயதுவருகின்றனர். நீங்க ஒரு நேர்மையான அதிகாரியை கொண்டு அந்த ஸ்கூலில் ஆய்வு நடத்தினால், பல உண்மைகள் தெரியவரும். சாராய பாட்டில்களை அங்கேயே வீசி உடைத்துவிட்டு சென்றுள்ளனர் அதுவே சாட்சியாகும்.

தினமும் காலையில் பள்ளி வளாகத்தில் இருந்து மதுபாட்டில்களையும், அசுத்தங்களையும் வெளியே எடுத்து போடும் நிலை இன்றளவும் தொடர்கிறது.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இப்பகுதி மக்கள் சிலர் பள்ளிக்குள் மாடுகளை அவிழ்த்துவிட்டும், கொட்டகை அமைத்தும் அனுபவித்து வருகின்றனர்.

ஆட்சியரம்மா, இந்த பள்ளிக்கூடத்துல ஆசிரியர்களுக்கு மட்டும் கழிவறை வசதி உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு கிடையாதுங்க. இங்க படிக்கிற பிள்ளைகளில் சுமார் 90 பேர் மணவிகள். அவுங்க இயற்கை உபாதைகள் கழிக்கனும்னா ரொம்ப கஷ்டபடுறாங்கம்மா.

சம்மந்தப்பட்டவங்க கிட்ட பல முறை சொல்லிடோம்ங்க. கழிவறை வசதி இல்லாததினாலேயே பல மாணவிகள் பள்ளிக்கூடம் பக்கம் வர மறுக்கிறார்கள். அப்படியே வந்த பலம் பாதியிலேயே வீட்டுக்கு போய்டுறாங்கம்மா.

இயற்கை உபாதைக்கு ஒதுங்க வசதி செய்து கொடுக்காம பள்ளிக்கூடம் கட்ட அரசு அனுமதித்திருக்காது என்பது பாமரனாகிய எனது எண்ணம்ங்க.

மேலும் பள்ளி சுற்றுப்புற பகுதிகள் விவசாய நிலங்கள் உள்ளதால் பள்ளிக்குள் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வருகின்றன, இதனால் மாணவ மாணவிகள் பயப்படுகின்றனர்.

பள்ளியை சுற்றி செடிகள் வைக்கப்பட்டுள்ளது சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடுமாடுகள் அவற்றை மேய்ந்து செடிகளே இல்லாமல் நாசம் செய்துவிட்டன.
இந்தப் பள்ளியை சுற்றி 550 மீட்டர் சுற்றளவு கொண்ட சுற்றுச்சுவரை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் மிதிவண்டிகளை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கி சிமெண்ட் சீட் நிழற் கூடம் அமைச்சி கொடுக்கனம்மா.

இப்படித்தாங்க பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் என்னைப்போன்ற பாமரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புது மாவட்டம் உதயமாகிய பின்னர் ஆட்சியரம்மாவின் பார்வைக்கு இதைப்பற்றி கொண்டு செல்லனும் என நாங்க முயன்றோம். அதற்காக அதிகாரி சாருங்களை நாடினோம்ங்க. ஆனால் இதுவரைக்கும் அவுங்க உங்களுக்கு சொல்லலை போல இருக்குது.

அதனாலதான் இதை கடித பாணியில் தங்களுக்கு தெரிவிக்கிறேனுங்க. தயவு செய்து மாணவர்க்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுங்கம்மா என்று கோரும், பாமரன்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.