சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆதி திராவிடர் சட்ட பட்டதாரிகள் 63 நபர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு ஊக்க தொகையினை வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

ஆதிதிராவிடர்களை ஊக்குவிக்க அதிகளவில் அதிமுக அரசு தான் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

யாரோ எழுதி கொடுப்பதையே ஸ்டாலின் அறிக்கையாகவோ, பேசியும் வருகிறார். அடுத்தவர்கள் கூறுவதை கேட்க ஸ்டாலினுக்கு காது கேட்காது.

மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் கோரிக்கைக்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். ஆளுநருடன், அரசு சார்பாக அமைச்சர்கள் நடத்தும் ஆலோசனைகளை வெளியே கூறமுடியாது.

உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு பெற்று தந்த பெருமை அரசுக்கு ஒந்துவிடக்கூடாது எனவும், தாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து தான் அதனை பெற்று கொடுத்தோம் என பெருமை பட்டு கொள்ளவே ஆர்ப்பாட்ட அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. உள் ஒதுக்கீடு பெற்ற பிறகே தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.

அதிமுக கூட்டணியில் தான் பாமக உள்ளது. கூட்டணியில் எந்த குழுப்பமும் இல்லை.

குரூப் 4 தேர்வு விவகாரத்தில் பாடத்திட்டம் மாற்றப்படாது. பழைய நிலையே தொடரும். தேர்வு அறிவிக்கும்போது மாணவர்கள் பழைய முறை படியே பங்கேற்கலாம்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது மேலும் தொடரும்.

சசிகலா வெளியே வந்தால் மகிழ்வதும், வெளியே வராவிட்டால் வருந்துவதும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களே தவிர வேறு யாரும் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைய போவதில்லை என அவர் தெரிவித்தார்.